பாலிவுட் திரையுலகின் முன்னனி நடிகர் ஆமிர் கான், தனது 61 வயதில் மூன்றாவது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் என்ற செய்தி தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. வரும் ஜூலை 5-ஆம் தேதி, ஆமிர் கானின் இல்லத்தில் மிக எளிமையான முறையில் இந்தத் திருமணம் நடைபெறவுள்ளது. தனது காதலி கௌரி ஸ்ப்ராட் உடனான இந்தத் திருமணம் குறித்து ஆமிர் கான் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டபோது, அவரின் முதல் மனைவி ரீனா தத்தாவின் மகனான ஜூனைத் கானும் அருகில் நின்று கொண்டிருந்தார். தனது 30 வயது மகனை பக்கத்தில் வைத்துக்கொண்டு ஆமிர் கான் தனது மூன்றாவது திருமணத்தைப் பற்றிப் பேசியதும், அதற்கு ஜூனைத் கான் புன்னகையுடன் ரியாக்ட் செய்ததும் ஒட்டுமொத்த நெட்டிசன்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் தனது மகனுடன் கலந்துகொண்ட ஆமிர் கான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஆம், ஜூலை 5 அன்று எனக்கு திருமணம் நடக்கவிருக்கிறது. இது இருவீட்டு குடும்பத்தினர் மட்டுமே கலந்துகொள்ளும் மிக எளிமையான வீட்டு விசேஷமாக இருக்கும். ஜூலை 5 எங்கள் வாழ்வில் மிக முக்கியமான நாள். உங்கள் அனைவரின் ஆசிகளும் பிரார்த்தனைகளும் எங்களுக்கு தேவை” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார். இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்டுகளை தட்டிவிட்டு வருகின்றனர்.
“எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் உண்டு, ஆனால் இந்த முறையாவது பிரிந்துவிடாதீர்கள்” என்று ஒருவர் கிண்டலடித்துள்ளார். மற்றொருவரோ, “30 வயது மகனை பக்கத்தில் நிறுத்திவிட்டு மூன்றாவது திருமண அறிவிப்பை வெளியிடுகிறார்.. பாலிவுட் அடுத்த தலைமுறைக்கு என்ன கற்றுக்கொடுக்கிறது?” என்று சாடியுள்ளார். இன்னும் சிலரோ, “மனுஷன் வாழ்க்கையை ஜாலியாக என்ஜாய் செய்கிறார்” என்று அவருக்கு ஆதரவாகவும் பேசியுள்ளனர். முன்னதாக, தனது 60-வது பிறந்தநாளின் போது கௌரி ஸ்ப்ராட்டுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதை அறிவித்த ஆமிர் கான், அவருடன் லிவ்-இன் முறைப்படி வாழ்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமிர் கானுக்கு ஏற்கனவே ரீனா தத்தா மூலம் ஜூனைத், ஐரா என்ற இரு பிள்ளைகளும், கிரண் ராவ் மூலம் ஆசாத் என்ற 14 வயது மகனும் உள்ளனர்.
