குழந்தைகளின் எதிர்காலத்தினை மேம்படுத்துவதற்கு குழந்தை ஆயுள் காப்பீட்டு திட்டம் ஒரு நல்ல பயனை தரும். இதற்காக மத்திய அரசுக்கு சொந்தமான தபால் அலுவலகம் பால் ஜீவன் பீமா யோஜனா என்ற சிறப்பான திட்டத்தை வழங்குகிறது. தபால் அலுவலகம் வழங்கக்கூடிய இந்த பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில், தினசரி ரூ.6 முதலீடு செய்வதன் வாயிலாக உங்களது குழந்தையின் எதிர்காலத்தை மேம்படுத்தலாம்.

இத்திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலமாக உங்கள் குழந்தையின் கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான செலவை முன்கூட்டியே சேமிக்க முடியும். குழந்தையின் பெற்றோர் மட்டும்தான் இத்திட்டத்தின் பயன்பெற முடியும். அதே நேரம் இத்திட்டத்தைப் பெற சில விதிமுறைகளும் இருக்கிறது. அதன்படி பெற்றோரின் வயது 45 வயதுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். 45 வயதுக்கு அதிகமான பெற்றோர்கள் இத்திட்டத்தில் முதலீடு செய்ய முடியாது.

5-20 வயது வரையுள்ள குழந்தைகள் பால் ஜீவன் பீமா யோஜனா திட்டத்தில் முதலீடு செய்யலாம். இத்திட்டத்தில் பெற்றோர்கள் தங்களது 2 குழந்தைகளுக்கு மட்டும்தான் பாலிசியை வாங்க இயலும். இந்த திட்டத்தில் உங்கள் குழந்தைக்கு நாளொன்றுக்கு ரூ.6 முதல் ரூ.18 வரையிலான பிரீமியம் தொகையை டெபாசிட் செய்யலாம். இதில் தினமும் ரூ.6 பிரீமியமாக 5 வருடங்களுக்கு டெபாசிட் செய்யலாம் மற்றும் தினசரி ரூ.18 வீதம் இருபது வருடங்களுக்கு பிரீமியம் செலுத்தினால் திட்டத்தின் முதிர்வில் பாலிசிதாரர்கள் ரூ.1 லட்சம் பெறலாம்.