துருக்கி நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 4.20 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது நரடஹிகி நகரில் இருந்து 23 கிலோமீட்டர் கிழக்கில் 17 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதி துருக்கி சிரியாவின் எல்லை அருகே அமைந்துள்ளதால் சிரியா, லெபனான், இஸ்ரேல் உட்பட அண்டை நாடுகளிலும் இது உணரப்பட்டுள்ளது.

இதுதான் நூறாண்டுகளுக்குப் பிறகு அப்பகுதியை தாக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஆகும். இதனை அடுத்து பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவிலும் மூன்றாவது முறையாக 6.0 ரிக்டர் அளவிலும் அடுத்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. மேலும் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கம் கிரீன்லாந்து வரை உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் நிலநடுக்கத்தினால் இதுவரை 4000 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 15 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இதனால் துருக்கி நாட்டில் ஏழு நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என்று அந்நாட்டின் அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன் கூறியுள்ளார். மேலும் வருகின்ற 12-ம் தேதி வரை துருக்கியில் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் கூறியுள்ளார். அதேபோல் வெளிநாட்டு பிரதிநிதி அலுவலகங்களிலும் துருக்கியின் தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.