ஈரான் நாட்டின் ராணுவ தொழிற்சாலையில் ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டிற்கு எதிராக இயங்கும் தீவிரவாத அமைப்பினருக்கு ஈரான், ஆயுதங்கள் அளிப்பதாக குற்றம் சாட்டப்படுகிறது. எனவே, இவ்விரு நாடுகளுக்கிடையேயான மோதல் நெடுங்காலமாக நீடித்துக் கொண்டிருக்கிறது. இது மட்டுமின்றி இஸ்ரேல், கிழக்கு பிராந்தியத்தில் அமைந்திருக்கும் மற்ற நாடுகளுக்கும் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில், ஈரான் நாட்டின் டெஹ்ரான் நகரத்திலிருந்து சுமார் 350 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் இஸ்பஹான் நகரத்தில் அமைந்துள்ள ராணுவ தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை அன்று ட்ரோன் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

3 ட்ரோன்களில் வெடிகுண்டுகள் இருந்ததாகவும், அதில் இரண்டு ட்ரோன்கள் வழியிலேயே மறித்து அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீதமிருந்த ட்ரோன் தொழிற்சாலையில் விழுந்து வெடித்தது. இதில், அதிகளவில் தீப்பற்றி எரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் பலிகள் ஏற்படவில்லை.