பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த ராமசாமி என்பவருடைய மனைவியும் அவருடைய மகளும் குடும்ப சொத்தில் பங்கு கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குடும்ப சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு எனக்கூறி சொத்தில் பங்கு கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து ராமசாமியின் இரு மகன்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்து சட்டத்தில் பழங்குடியின பெண்கள் சேர்க்கப்படாததால் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் சம பங்கு உண்டு என சேலம் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு தவறானது என மனுதாரர்கள் தரப்பில் கூறப்பட்டது.

இந்த வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் பழங்குடியின பெண்களுக்கு சொத்தில் பங்கு வழங்க மறுக்கும் வகையில் எந்த மரபும் நடைமுறையும் நிரூபிக்கப்படாததால் இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் கீழ் பெண்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்ற தீர்ப்பு சரிதான் என்று நீதிபதிகள் கூறி சொத்தில் பங்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும் பழங்குடியின பெண்களுக்கும் சொத்தில் சமபங்கு வழங்குவதற்கான நடைமுறைகளுக்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.