பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை வீரர்களுக்கு இடையே மோதல், மேட்ச் விக்கி ஊழல்கள், நேரலை டிவியில் முன்னாள் வீரர்களுக்கு இடையே சண்டைகள், கிரிக்கெட் வாரிய தலைவர் மீது புகார், பாலியல் புகார் என பல்வேறு புகார்கள் நீண்டு கொண்டே போகும். கடந்த 2007-ம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. அப்போது அந்த அணியின் பயிற்சியாளர் பாப் உல்மர் ஹோட்டல் அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது மரணத்தில் இருக்கும் மர்மங்கள் இதுவரை நீங்க வில்லை. இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் தொடக்க வீரர் இம்ரான் நசீர் தற்போது ஒரு பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.

அதாவது அவருக்கு யாரோ உணவில் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து கொடுத்துள்ளனர். இதனால் கடந்த 6,7 வருடங்களாக மூட்டு பலவீனம் அடைந்து பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளார். தான் சேர்த்து வைத்திருந்த மொத்த பணத்தையும் மருத்துவ செலவுக்காக செலவழித்து விட்ட நிலையில் பணம் இல்லாமல் தவித்துள்ளார். அப்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிதான் 40 லட்சம் ரூபாய் வரை செலவு செய்து தன் உயிரை காப்பாற்றியுள்ளதாக இம்ரான் நசீர் கூறியுள்ளார். மேலும் அவருக்கு யார் மெல்ல கொல்லும் விஷத்தை கொடுத்தது என்பது தெரியவில்லை என்று கூறியுள்ளார்.