இந்தி டைரக்டர் சுதீப்டோ சென், “தி கேரளா ஸ்டோரி” எனும் பெயரில் திரைப்படம் இயக்கி உள்ளார். இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியாகியது. அதில் கேரளாவிலிருந்து 32 ,000 இளம் பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றது. இந்த படத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என கேரள அரசுக்கு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர். இருப்பினும் இந்த படம் கடும் எதிர்ப்புக்கு இடையே திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் சீமான் நிரூபர்களிடம் கூறியிருப்பதாவது “இந்தியா மதச் சார்பற்ற நாடு என்று தான் நாம் அனைவரும் நம்பிக்கொண்டிருக்கிறோம். இப்போது மதமே ஆட்சிசெய்யும் போக்கை நாம் கண் கூடாக பார்த்து வருகிறோம். இந்தியாவில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்த 9 வருடங்களில் கொடும் போக்கு நிலவுகிறது. மேலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு எதிரான கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.

ஒவ்வொரு காலக் கட்டத்திலும் தேர்தல் வரும்போது காஷ்மீர் பைல்ஸ் உள்ளிட்ட சர்ச்சைக்குரிய படங்கள் வந்தது. கர்நாடக தேர்தலின்போது “தி கேரளா ஸ்டோரி” படம் வெளிவந்துள்ளது. பிரதமர் மோடி பொதுக் கூட்டத்தில் பேசுகையில் தி கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை கேட்பவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பவர்கள் ஆவார்கள் என கூறுகிறார். இதுபோல் கொடுமை எங்காவது உண்டா? வருகிற 2024 பாராளுமன்ற தேர்தலுக்கும் ஒரு படம் தயாராகிக் கொண்டிருக்கிறது” என்று அவர் பேசினார்.