நான் அஜித் அகர்கர் என்றால் டி20 உலகக் கோப்பைக்கான அணி தாளில் பும்ரா மற்றும் ஷமிக்குப் பிறகு மயங்க் யாதவின் பெயரை எழுதுவேன் என்று முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி தெரிவித்துள்ளார்..

ஐபிஎல் 2024ல் லக்னோ அணிக்காக ஆடி வருகிறார் 21 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ். இவர் 2 போட்டிகளில் தனது வேகத்தால் குறைந்த எக்கனாமியில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது கிரிக்கெட் உலகில் அதிகம் பேசப்படுகிறது. சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், 21 வயதான அவர் 150 கிமீ வேகத்தில் பந்தை அசால்ட்டாக வீசுகிறார். மேலும் இதனால் பேட்டர்கள் பந்தை எதிர்கொள்வதே கடினமாக இருக்கிறது.. ஆர்சிபி – எல்எஸ்ஜி அணிகள் மோதிய நேற்றைய போட்டியில், வேகப்பந்து வீச்சை சிறப்பாக ஆடும் கிளென் மேக்ஸ்வெல், யாதவின் வேகத்தை சமாளிக்க முடியாமல் சிம்பிளாக கேட்ச் கொடுத்தார். ஆர்சிபி வரிசையில் மற்றொரு ஆஸி வீரர் கேமரூன் கிரீன், மயங்கின் பந்தை கணிப்பதற்குள் ஸ்டெம்பை பதம் பார்த்தது. இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

டெல்லியைச் சேர்ந்த மயங்க் யாதவ் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான தனது முதல் ஆட்டத்திலும் இதைச் செய்தார். இதனால் இரண்டு முறை ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2024 மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் அவரை சேர்க்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். மயங் யாதவ் மணிக்கு 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி ஐபிஎல் 2024 இன் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.