2023 உலக கோப்பையில் இன்று மும்பை வான்கடே ஸ்டேடியம் மைதானத்தில் பங்களாதேஸ்  மற்றும் தென்னாப்பிரிக்கா  அணிகள் மதியம் 2 மணிக்கு மோதியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென்னாப்பிரிக்கா  துவக்க வீரர்களான குயின்டன் டி காக் மற்றும் ரீசா ஹென்ட்ரிக்ஸ் இருவரும் களமிறங்கினர். இதில் ரீசா ஹென்ட்ரிக்ஸ் 12  ரன்களில் வெளியேறினார்.

இதையடுத்து களமிறங்கிய ராஸ்ஸி வான் டெர் டுசென் 1 ரன்னில் மெஹிடி ஹசன் மிராஸ் பந்தில் வெளியேற 3ஆவது விக்கெட்டுக்கு  ஐடன் மார்க்ரம் மற்றும் குயின்டன் டி காக் இருவரும் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் ஆடினர். சிறப்பாக விளையாடிய இருவரும் அரைசதம் கடந்த நிலையில் ஐடன் மார்க்ரம் 60 ரன்னில் ஷகிப் அல் ஹசன் பந்தில் ஆட்டமிழந்தார். 3ஆவது விக்கெட்டுக்கு இந்த ஜோடி131 ரன்கள் குவித்து அசத்தினர்.

அதை தொடர்ந்து 4ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹென்ரிச் கிளாசென் ஜெட் வேகத்தில் ரன் விகிதத்தை ஏற்ற சவுத்ஆப்பிரிக்கா அணி ஸ்கோர் வெகுவாக ஏறியது. மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை ஆடிய குயின்டன் டி காக் அசத்தல் சதம் அடிக்க தனது பங்குக்கு கிளாசெனும் அரைசதம் அடித்தார். 150 ரன்களை கடந்த குயின்டன் டி காக் ஹசன் மஹ்மூத் பந்தில் நாசும் அகமதிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

குயின்டன் டி காக் – ஹென்ரிச் கிளாசென்  ஜோடி 4ஆவது விக்கெட்டுக்கு 142 எடுத்தது. குயின்டன் டி காக் 140 பந்துக்களில் 15 பவுண்டரி, 7 சிக்ஸர் என 174 ரன் குவித்தார். 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய டேவிட் மில்லர் ஹென்ரிச் கிளாசென் உடன் சேர்ந்து விளாச தென் ஆப்பிரிக்கா அணி இந்த ஜோடி 20 பந்துகளில் 50 ரன்கள் குவிக்க தென் ஆப்பிரிக்கா 48.1 ஓவர்களில் 350 ரன்கள்  எடிட்டியது.

இறுதியாக சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட ஹென்ரிச் கிளாசென்  ஹசன் மஹ்மூத் பந்தில் மஹ்முதுல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 49 பந்தில் 2 பவுண்டரி, 8 சிக்ஸர் உடன் 90 ரன் எடுத்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்கா 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 382  ரன்கள் எடுத்ததும் டேவிட் மில்லர்* 34 ( 15 ) , மார்கோ ஜான்சன் 1 (1) * இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.