சென்னை ரோகிணி திரையரங்கிற்கு பத்து தல படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த நரிக்குறவர்களை ஊழியர்கள் அனுமதிக்க மறுத்து இருக்கின்றனர். டிக்கெட் இருந்தும் அவர்களை அனுமதிக்காததை ஒருவர் வீடியோ எடுத்து ஷோசியல் மீடியாவில் பதிவிட்டது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி பேசுப்பொருளாகி உள்ளது. இதுபற்றி ரோகிணி திரையரங்கு சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், யு/ஏ சான்றிதழ் அனுமதி பெற்ற திரைப்படம் என்பதால் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கு அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் திரையரங்கிற்கு வந்தவர்கள் 2,6,8 மற்றும் 10 வயதுள்ள குழந்தைகளுடன் வந்ததால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது. இருந்தாலும் உரிய நேரத்தில் அவர்கள் படம் பார்த்ததாக திரையரங்க நிர்வாகம் வீடியோ ஒன்றை வெளியிட்டது.

இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து விசாரணை மேற்கொள்ள மாநில மனித உரிமை ஆணையமானது தாமாக முன்வந்துள்ளது. அதிலும் குறிப்பாக மாநில மனித உரிமை ஆணையத்தின் அதிகாரி எஸ்.பி. மகேஸ்வரன் தலைமையில் விசாரணை நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சென்னை ரோகிணி திரையரங்கத்தின் வளாகத்துக்கு பாதிக்கப்பட்ட நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 4 பேர் அழைகப்பட்டுள்ளனர். அதோடு இந்த சம்பவம் குறித்து ரோகிணி திரையரங்க உரிமையாளரிடமும் விசாரணை நடைபெற உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.