ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக கட்சியில் எடப்பாடி தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக சார்பில் ஈரோடு கிழக்கு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பெருந்துறை அருகே அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகில் பணிமனை அமைக்கப் பட்டுள்ளது. இந்த பணிமனை அமைக்கப்பட்ட போது அதிமுக தலைமையிலான கூட்டணி என்றும், திறப்பு விழாவின் போது தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்றும் பேனர் வைக்கப் பட்டிருந்தது. இது கூட்டணியில் இருக்கும் பாஜகவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அன்று மாலை தேசிய ஜனநாயக கூட்டணி என்று மாற்றி புதிய பேனர் வைத்தனர்.

அதன்பின் அதற்கு அடுத்த நாள் அஇஅதிமுக கூட்டணி வேட்பாளர் என மாற்றி பேனர் வைத்தனர். இந்த 4 பேனர்களில் எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் படமும், தமாக கட்சியின் ஜி.கே வாசன் மற்றும் புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணசாமி ஆகியோரின் படங்களும் இடம்பெற்று இருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு பணிமனையில் தற்போது அதிமுக 5-வது முறையாக புதிய பேனர் வைத்துள்ளது. இதில் அஇஅதிமுக கூட்டணி கட்சியின் வெற்றி வேட்பாளர் என பெயர் மாற்றப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மற்ற கூட்டணி தலைவர்கள் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது.