கேரளாவில் கடந்த 2009-ம் வருடம் நவம்பர் 29-ம் தேதி அபின் என்பவர் மோட்டார் சைக்கிள் ஓட்டிச் சென்றபோது ஒரு மின்கம்பத்தில் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் அவரது தலையில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. உடனே அவர் கொத்தமங்கலம் மார் பேஸ்லியஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். இதையடுத்து மேல் சிகிச்சைக்காக எர்ணாகுளம் லேஷோர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். டிசம்பர் 1-ம் தேதி அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாகவும், அவரது முக்கிய உறுப்புகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அதோடு அவருடைய கல்லீரல் வெளிநாட்டு நோயாளி ஒருவருக்கு பொருத்தப்பட்டதாகவும் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதனை தொடர்ந்து சட்டத்தை மீறி தவறாக சித்தரித்து பாதிக்கப்பட்டவரின் பெற்றோர் ஒப்புதலைப் பெற்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எர்ணாகுளம் லேஷோர் ஆஸ்பத்திரி மற்றும் குற்றத்தில் தொடர்புடைய 8 டாக்டர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.