தமிழில் மணிரத்னம் டைரக்டு செய்த “கன்னத்தில் முத்தமிட்டால்”, தங்கர்பச்சான் இயக்கிய “அழகி” உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நந்திதா தாஸ். மேலும் இவர் இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் பெரும்பாலான படங்களில் நடித்து இருக்கிறார். இப்போது குழந்தைகள் உரிமைகள் மற்றும் பெண்கள் நலனுக்காகவும், நிறபாகுபாடுக்கு எதிராகவும்அவர்  குரல் கொடுத்து வருகிறார்.

இதுகுறித்து நந்திதா தாஸ் அளித்த பேட்டியில் “நான் கல்லூரியில் பயின்றபோது நிற பாகுபாடு பிரச்சினைகளை பல முறை எதிர்கொண்டுள்ளேன். அப்போது சில பெண்கள் தன்னிடம் கருப்பு நிறத்தை வைத்துக்கொண்டு எப்படி தன்னபிக்கையோடு வாழமுடியும் என்று கேட்டனர். நான் அவர்களை வியப்புடன் பார்த்தேன்.

காரணம் எப்போதும் நான் உடல் நிறத்தை பற்றி சிந்தித்ததே இல்லை. இதனிடையே கடைகளுக்கு நான் அழகுசாதன பொருட்களை வாங்க போகும்போது கடை ஊழியர்கள் என் நிறத்தை பார்த்து நான் வெள்ளை ஆவதற்கு பயன்படும் கிரீம்களை எடுத்து நீட்டினர். நான் அவர்களிடம் இந்த உடம்பிலே தான் பிறந்தேன், இந்த உடம்பிலேயே இறப்பேன். ஆகவே என்னை வெள்ளையாக்கும் கிரீம் எதையும் தர வேண்டாம் என்று கூறினேன்” என்றார்.