பிறந்த குழந்தைக்கான காப்பீடு என்னும் நிலைப்பாடு குறைமாதத்தில் பிறந்த குழந்தைகளுக்கும் பொருந்தும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு ஜோஷி என்பவர் 20 லட்சம் மதிப்புள்ள இரண்டு காப்பீடுகளை பல வருடங்களாக புதுப்பித்து வந்துள்ளார். இந்நிலையில் 2018 செப்டம்பர் வருடம் அவருக்கு முப்பது வாரத்தில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு மகப்பேறு சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த வருடம் தான் கூடுதல் தொகை இல்லாமல் பிறந்த குழந்தைகளுக்கு காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனது குழந்தைகளுக்காக செலவிட்ட 11 லட்சத்தை காப்பீட்டு நிறுவனத்திடம் ஜோஷி கேட்டுள்ளார்.

ஆனால் குறை மாதத்தில் குழந்தை பிறந்த குழந்தைகளுக்கு இது பொருந்தாது என தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜோஷி நீதிமன்றத்தை நாடி உள்ளார். மனுவை விசாரித்து பல மருத்துவர்களின் கருத்துக்களை கேட்ட நீதிமன்றம் காப்பீடு செய்தவரின் நன்மையை உடைக்கும் விதமாக நடந்து கொண்டிருக்கும் நிறுவனம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து 11 லட்சத்திற்கு 9% வட்டி கணக்கிட்டு மொத்த தொகையை அளிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் தங்களது இரட்டை குழந்தைகள் குறை மாதத்தில் பிறந்த நிலையில் ஏற்பட்ட மன வருத்தத்தோடு காப்பீடு நிராகரிக்கப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு கூடுதலாக அவருக்கு ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

காப்பீடு செய்யும் நபர்கள் வருடம் தோறும் காப்பீட்டை புதுப்பித்து அதற்கான தொகையை அளித்து காப்பீடு தங்களுக்கு உதவும் என்ற நம்பிக்கையோடு இருந்து நியாயமாக காப்பீடு கோரும்  போது, அதனை தவிர்ப்பதே நோக்கமாகக் கொண்டிருப்பதை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தொகையும் நான்கு வாரங்களுக்குள் செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.