தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் ஜெயலலிதா மற்றும் கலைஞர் போன்ற தலைவர்களுடன் என்னை ஒப்பிட்டு பேசவில்லை. சில கட்சிகளில் மேனேஜர்கள் இருக்கிறார்கள். சில கட்சிகளில் தலைவர்கள் இருக்கிறார்கள். நான் ஜெயலலிதா போன்று முடிவுகளை எடுப்பேன் என்று எடுத்துக்காட்டாக தான் கூறினேன். என்னை பொறுத்தவரை என்னுடைய அம்மா ஜெயலலிதா அம்மையாரை விட 100 மடங்கு பவர் ஃபுல். என்னுடைய மனைவி ஜெயலலிதா அம்மையாரை விட 1000 மடங்கு பவர் ஃபுல். எங்கள் பாதை தனி பாதை.

எனவே அதிமுகவுடன் பாஜகவை ஒப்பிட்டு பேசாதீர்கள். அதன்பிறகு தினமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வேறு கட்சியிலிருந்து எங்கள் கட்சியில் இணைகிறார்கள். எங்கள் கட்சியிலிருந்தும் சில நிர்வாகிகள் வேறு கட்சியில் சென்று இணைகிறார்கள். இன்னும் 6 மாதத்தில் முக்கிய புள்ளிகள் கூட பாஜகவில் இருந்து செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதேபோன்று அங்கிருந்தும் முக்கிய புள்ளிகள் இங்கு வர வாய்ப்பு உள்ளது. 4 பேர்  போகத்தான் செய்வார்கள். 40 பேர் வர தான் செய்வார்கள் என்று கூறினார். மேலும் அண்ணாமலை ஜெயலலிதா அம்மையார் உடன் தன் தாய் மற்றும் மனைவியை ஒப்பிட்டு பேசியது தற்போது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.