2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று முன்தினம் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்பின் சட்டப்பேரவையில் 2023-24 வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்து பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்நிலையில் வேளாண் பட்ஜெட்டில் முக்கிய திட்டங்களை அறிவித்த முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு நடிகர் கார்த்தி நன்றி கூறியுள்ளார். அதோடு வேளாண் சுற்றுலா, சிறுகுறு உழவர்களுக்கான வேளாண் கருவிகள் வழங்கி நிதி ஒதுக்கீடு, மரபு விதைகள் பரவலாக்கம் போன்ற அறிவிப்புகள் இந்த காலகட்டத்திற்கு அவசியமானது எனக் கூறிய கார்த்தி, உழவர்கள் தங்களுக்கு பயனளிக்கும் திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.