குஜராத் மோா்பியில் மச்சு நதியின் குறுக்கே ஆங்கிலேயா் ஆட்சிக்காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம், முக்கியமான சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கியது.  இந்த பாலம் மீண்டுமாக புனரமைக்கப்பட்டு கடந்த வருடம் அக்,.26ம் தேதி திறக்கப்பட்டது. இந்நிலையில் அக்,.30 ஆம் தேதி பாலத்தில் சுமாா் 250 போ் நின்றிருந்த நிலையில், அது அறுந்து விழுந்து 135 போ் உயிரிழந்தனா்.

இச்சம்பவத்தில் ஒரேவா குழுமத்தின் 2 மேலாளா்கள், 2 டிக்கெட் பதிவு ஊழியா்கள், பாலத்தை பழுதுபாா்க்கும் பணியை மேற்கொண்ட 2 துணை ஒப்பந்ததாரா்கள், 3 பாதுகாவலா்கள் என பலர் கைதாகினா். இதுகுறித்து விசாரணை நடத்திய சிறப்பு விசாரணைக் குழு அளித்த அறிக்கையில், மோர்பி பால விபத்தில் நாட்டின் பல வருடங்கள் பழைமைவாய்ந்த பாலத்தின் நிலையை மேம்படுத்துவதிலும், அதில் வரும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதிலும் மிக மோசமான கவனக்குறைவு இருந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதோடு தொங்கு பாலத்தை தாங்கிக்கொண்டிருந்த 49 இரும்புக் கயிறுகளில் கிட்டத்தட்ட 22 கயிறுகள் பாலம் அறுந்து விழுவதற்கு முன்பே பாதி அறுந்தநிலையில் தான் இருந்திருக்கிறது. சம்பவ இடத்தில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டபோது இதற்கான தடயங்கள் கிடைத்திருக்கிறது. மீதம் இருந்த 27 இரும்புக் கயிறுகள் தான் விபத்தின்போது அறுந்துள்ளது. பாலத்தை மீண்டும் திறக்கும் முன்பு நகராட்சி அதிகாரிகள் செயற்குழு ஆணையம் கவனக்குறைவுடன் இருந்ததும் சுட்டிக்காட்டப்பட்டு இருக்கிறது. நகராட்சியும் பாலத்தின் திறப்பு பற்றி எந்த அனுமதியும் வழங்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.