தமிழக அரசுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜியால் கெட்ட பெயர் தான் வருகிறது என பாமக கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார். அதாவது சென்னையில் தானியங்கி மது வழங்கும் மெஷின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சிகள் பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் சென்னை வானகரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அன்புமணி ராமதாஸ், சமூக நீதிக்கு மது மிகப்பெரிய அச்சுறுத்தலாக மது இருப்பதாகவும் அந்த துறை சார்ந்த அமைச்சர் மதுவை எப்படி அதிகமாக விற்பனை செய்யலாம் என்பது குறித்து யோசித்து வருகிறார் என்றும் கூறினார். அதன் பிறகு இந்தியாவில் அதிக மது விற்பனை செய்யும் மாநிலமாக தமிழகம் இருப்பதோடு, அதிக மக்கள் மது குடிக்கிற மாநிலமாகவும் தமிழகம் தான் இருக்கிறது.

வருடத்திற்கு 45 ஆயிரம் கோடி மதுவால் வருமானம் கிடைக்கிறது. உலக சுகாதார நிறுவனம் தானியங்கி தொழில்நுட்ப எந்திரம் மூலம் மதுவை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தி வரும் நிலையில், அத்தகைய தொழில்நுட்பத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தி பிரபலப்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் மதுவிலக்கு எப்போது என்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவிக்க வேண்டும். செந்தில் பாலாஜி போன்ற அமைச்சரால் திமுக அரசுக்கு கெட்ட பெயர் தான் வரும். மேலும் தானியங்கி மதுவழங்கும் எந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் திட்டத்தை அரசு கைவிடவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார்.