தமிழர்களின் முக்கிய பெரும் பண்டிகையான பொங்கல் நாளை(ஜன,.15) முதல் 4 நாட்கள் வெகு விமர்சியாக கொண்டாடப்பட இருக்கிறது. புது ஆண்டு பிறந்ததிலிருந்து பொங்கல் பண்டிகைக்குரிய கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டது. பொங்கல் பண்டிகை என சொல்வதைவிட திருவிழா என்றே கூறலாம். இந்தியா முழுவதும் பொங்கல் பண்டிகை பரவலாக கொண்டாடப்பட்டாலும் தமிழகத்தில் தான் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

விவசாயத்தில் மனிதனுடன் சேர்ந்து மாடுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. காலப் போக்கில் இதை நாம் மறந்துவிடக் கூடாது என்பதற்காக பாரம்பரியமாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. பணம் கொடுத்தால் உணவு வருவதற்கு முன்பு, மற்றொரு ஜீவன் தனது உயிரைக் கொடுத்ததால் தான் நாம் சாப்பிடுகிறோம் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

இந்த உணர்வை மக்களுக்குள் கொண்டுவருவதற்காவே நமது கலாச்சாரத்தில் மாட்டு பொங்கல் கொண்டாடும் விழா வழக்கமாக மாறியது. அனைத்து அடிப்படையிலும் மிகச் சிறந்த பாரம்பரியமான நம் பண்பாட்டின் அடையாளமாக விவசாயம் மற்றும் கால்நடைகள் பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக மாட்டுக்காக ஒரு விழாவானது காலந்தோறும் கொண்டாடப்படுகிறது..