காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக எம்எல்ஏ ஒருவர் தொடர்ந்த வழக்கில் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ராகுல் காந்திக்கு 30 வருடங்கள் கால அவகாசம் கொடுத்து நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது.

தீர்ப்பு வந்த 24 மணி நேரத்திற்குள் நாடாளுமன்ற மக்களவை ராகுல் காந்தியை எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன் பிறகு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் டெல்லி துக்ளக் சாலையில் உள்ள அரசு இல்லத்தை ராகுல் காந்தி காலி செய்ய வேண்டும் என அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை கண்டித்து நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் இன்று மற்றும் நாளை 35 நகரங்களில் செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்கள். இந்த செய்தியாளர்கள் சந்திப்பு ஜனநாயகம் தகுதியற்றது என்ற தலைப்பில் நடைபெற இருக்கிறதாம். இந்த சந்திப்பின்போது ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரம் போன்றவைகள் குறித்து விளக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் நாளை காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் செய்தார்களை  சந்தித்து பேச இருக்கிறார்.