கடந்த 2021-ஆம் ஆண்டு இயக்குனர் ஜியோ பேபி இயக்கத்தில் மலையாளத்தில் உருவான படம்  ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இதில் நிமிஷா சஜயன், சுராஜ் வெஞ்சரமூட் ஆகியோர் நடித்துள்ள இந்த படம், நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

 இதனையடுத்து ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ என்ற மலையாள படத்தை இயக்குனர் ஆர்.கண்ணன் தமிழில் ரீமேக் செய்துள்ளார். இந்நிலையில் தொலைக்காட்சியில் தனது திரை வாழ்க்கையை தொடங்கி, 2010 ல் “நீதானா அவன்” என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்று சினிமாவில் அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ஜெர்ரி சில்வெஸ்டர் வின்சென்ட் இசையமைத்துள்ளார். அண்மையில் இந்த  படத்தின் டிரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும்  ஈர்த்துள்ளது.

இந்நிலையில், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ படக்குழுவின் செய்தியாளர் சந்திப்பில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியுள்ளதாவது,”கடவுள் என்பது எல்லோருக்கும் ஒன்று தான். அதில் ஆண் என்றோ , பெண் என்றோ வித்தியாசம் எதுவும் இல்லை. மேலும் எந்தக் கடவுளும் என் கோவிலுக்கு இவர்கள் வரலாம், அவர்கள் வரக்கூடாது என்று கூறவில்லை. அப்படி எந்த கடவுளும் இதை செய்யக்கூடாது என சட்டமும் வைக்கவில்லை. இது எல்லாமே மனிதர்கள் உருவாக்கியது தான். நான் இது போன்ற கட்டுப்பாடுகளை எப்போதும் நம்புவதில்லை என்று கூறியுள்ளார்.