விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்கள். கள்ளச்சாரயம் குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதன்பிறகு எடப்பாடி பழனிச்சாமி செய்திகளை சந்தித்து பேசினார்.

அப்போது அதிமுக ஆட்சியில் கள்ளச்சாராயம் குடித்து யாருமே உயிரிழக்கவில்லை என்று கூறினார். அப்போது குறிக்கிட்ட நிருபர் ஒருவர் கடந்த 2020-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் கள்ளச்சாராயம் குடித்து 20 பேர் பலியானதாக கூறினார். அதற்கு ஆதாரமாக தேசிய குற்ற ஆவண காப்பக அறிக்கை மற்றும் நாடாளுமன்ற கேள்வி பதில் ஆகியவற்றையும் சுட்டி காட்டினார். அதற்கு எடப்பாடி பழனிச்சாமி மழுப்பலாக பதில் அளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டார்.