இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் கே.எல்.ராகுல் ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அபார சாதனை படைத்துள்ளார்.

லக்னோ மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம்  நேற்று இரவு லக்னோவில் நடைபெற்றது.  நேற்றைய ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் கேப்டனாக சாம் கரன் களம் இறங்கினார். டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி கே.எல் ராகுலின் அரைசதத்தால் (56 பந்துகளில் 8 பவுண்டரி, ஒரு சிக்ஸ் உட்பட 74 ரன்கள்) 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய பஞ்சாப் அணி 19.3 ஓவரில் 161 ரன்கள் எடுத்து த்ரில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் லக்னோ தோல்வியடைந்தாலும் கேஎல் ராகுல் மாபெரும் சாதனை படைத்துள்ளார்..

அதாவது இப்போட்டியில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் 29 ரன்களிலும், தீபக் ஹூடா 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும், எப்போதும் போல் பொறுமையுடன் விளையாடிய கே.எல்.ராகுல் 40 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 7 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம், ஐபிஎல் தொடரின் வரலாற்றில் மிகக் குறைந்த இன்னிங்சில் 4000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை கே.எல்.ராகுல் பெற்றார்.

இதற்கு முன் கிறிஸ் கெய்ல் 112 இன்னிங்ஸ்களில் 4000 ரன்களை கடந்து சாதனை படைத்திருந்தார். தற்போது கேஎல் ராகுல் 105 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். கெய்ல் 112 இன்னிங்ஸிலும், டேவிட் வார்னர் 114 இன்னிங்ஸிலும், விராட் கோலி 128 இன்னிங்ஸிலும், ஏபி டி வில்லியர்ஸ் 131 இன்னிங்ஸிலும் நான்காயிரம் ரன்களைக் கடந்துள்ளனர். தற்போது கே.எல்.ராகுல் அனைவரையும் முந்தியுள்ளார்.

அதேபோல் கேப்டனாக 2000 ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர்கள் பட்டியலில் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி கேஎல் ராகுல் சாதனை படைத்துள்ளார். இந்தப் பட்டியலில் டேவிட் வார்னர் 46 இன்னிங்ஸிலும், கே.எல்.ராகுல் 47 இன்னிங்ஸிலும், விராட் கோலி 59 இன்னிங்ஸிலும் இந்த மைல்கல்லை எட்டியுள்ளனர்.

இருப்பினும், கே.எல்.ராகுலின் ஸ்ட்ரைக் ரேட் மிகவும் குறைவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் தனது ஸ்டிரைக் ரேட்டை அதிகப்படுத்தாத வரை, இதுபோன்ற சாதனைகள் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக எடுபடாது என்றும் விமர்சிக்கப்பட்டுள்ளது.