கர்நாடகாவில் மே 10-ம் தேதி அதாவது நாளை சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பாஜக கட்சி தினமும் 1/2 லிட்டர் பால் பாக்கெட் 3 கேஸ் சிலிண்டர் இலவசம் போன்ற தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது. இதேப் போன்று காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், இலவச அரிசி இலவச மின்சாரம் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புக்கு தடை போன்ற வாக்குறுதிகளை கொடுத்துள்ளது.

இந்த அறிவிப்புகளை தொடர்ந்து தற்போது தெலுங்கானாவில் 18 வயது நிரம்பிய மாணவிகளுக்கு இலவச மின்சார ஸ்கூட்டர், இளைஞர்களுக்கு ரூ. 10 லட்சம் வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்ற அறிவிப்பை தற்போது தெலுங்கானா காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்புகளால் தற்போது தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்பிறகு தெலுங்கானா மாநில தனிப்பிரிவுக்காக போராடி உயிர் நீத்த இளைஞர்கள் தியாகிகளாக கருதப்படுவது, அவர்களின் பெற்றோருக்கு மாதம் 25 ஆயிரம் உதவித்தொகை மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை போன்ற அறிவிப்புகளையும் காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. மேலும் தெலுங்கானா மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.