தமிழகத்தில் சைபர் குற்றங்களை தடுக்கவும் குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் சைபர் அலர்ட் என்ற செயலி விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமாக சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பண மோசடி என்பது அதிகரித்துவிட்ட நிலையில், சைபர் குற்றவாளிகளிடம் பணத்தை இழந்தால் 24 மணி நேரத்திற்குள் புகார் கொடுக்க வேண்டும். அப்படி புகார் கொடுத்தால் மட்டுமே இழந்த பணத்தை விரைந்து மீட்க முடியும். இல்லையெனில் பலன் கிடைக்காது.

இந்நிலையில் தற்போது சைபர் அலர்ட் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த செயலியில் இதுவரை தமிழகத்தில் நடந்த சைபர் குற்றங்கள் மற்றும் பிடிபட்ட குற்றவாளிகளின் விவரங்கள் பதிவேற்றம் செய்யப்படும். புகார் செய்யப்பட்டவுடன் இந்த செயலியில் அது பதிவேற்றம் செய்யப்படும். இது தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகளிடமும் இருக்கும். மேலும் இதனால் சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க முடியும் என்று போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.