ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதியில் பிரசித்தி பெற்ற ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு 133 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே இருப்பதால் வார இறுதி நாட்களில் பலர் திருப்பதி கோவிலுக்கு செல்கிறார்கள். சென்னையில் இருந்து திருப்பதி செல்வதற்கு சித்தூர் சாலை வழியாக செல்கிறார்கள். இந்த வழித்தடத்தில் திருத்தணி உள்ளதால் அங்கு அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக சட்ராஸ்-செங்கல்பட்டு- காஞ்சிபுரம்-அரக்கோணம்-திருத்தணி பைபாஸ் சாலை திட்டம் கடந்த 2015-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.

ஆனால் பல்வேறு பிரச்சினைகளின் காரணமாக பணிகள் முடிவடைய தாமதமான நிலையில் தற்போது மீண்டும் பணிகள் வேகம் எடுத்துள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்தால் சென்னையில் இருந்து திருப்பதிக்கு 15 முதல் 20 நிமிடங்கள் முன்னதாக சென்று விடலாம். திருத்தணி அருகே 3.2 கிலோமீட்டர் தூரத்தில் இந்த பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திட்டத்திற்காக தமிழக அரசு 5.9 கோடி நிதியை விடுவித்துள்ள நிலையில், 94 சதவீத பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது‌. மேலும் இந்த பணிகள் இன்னும் ஒரு வருடத்திற்குள் நிறைவடைந்து பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.