நாடாளுமன்ற மக்களவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வருகிறது. இந்த பட்ஜெட் மீதான விவாதத்தில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் எழுத்துப்பூர்வமான அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, சிறுபான்மை சமூகத்தினருக்கு பட்ஜெட்டில் இழைக்கப்பட்ட பாகுபாடுகளுக்கு தீர்வு காண வேண்டும். அவர்களுக்கு நியாயமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். விழுப்புரம் தொகுதியில் உள்ள ரயில்வே பள்ளியை கேந்திரிய வித்யாலயா பள்ளியாக தரம் உயர்த்துவதோடு ஏகலாயா பள்ளிகள் போன்று எஸ்சி பிரிவினருக்கும் தனியாக பள்ளிகள் உருவாக்கப்பட வேண்டும்.

அதன் பிறகு மத்திய அரசு சமஸ்கிருத மொழிக்காக 4 பல்கலைக்கழகங்களை உருவாக்கியுள்ளது. சிறந்த தமிழ் அறிஞரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான மறைந்த கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா வருகிறது. அந்த நாளில் கலைஞர் கருணாநிதியை கௌரவிக்கும் விதமாக தமிழகத்தில் தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய பல்கலைக்கழக ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.