சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பகுதி மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தொண்டி பகுதியில் வண்ணான் குளம் மற்றும் கல்குளம் போன்ற பல்வேறு குளங்கள் அமைந்துள்ளது. இந்த குளத்தின் நீரை மழைக்காலங்களில் மக்கள் பயன்படுத்துகிறார்கள். அதோடு இந்த குளங்கள் சுற்று வட்டாரத்திற்கு குடிநீர் ஆதாரமாகவும் இருக்கிறது. ஆனால் தற்போது குளத்தில் ஆகாய தாமரை செடிகள் அதிக அளவில் இருப்பதால் தண்ணீரை பயன்படுத்த முடியாத நிலை உருவாகியுள்ளது.

எனவே குளங்களில் உள்ள ஆகாய தாமரைகளை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன் மற்றும் விக்டோரியா கௌரி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் குளங்களை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள் தொடர்பான புகைப்படத்தை காண்பித்தார். இதைப் பார்த்த நீதிபதிகள் ஆகாய தாமரையால் குளத்தில் உள்ள தண்ணீருக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என கேள்வி எழுப்பினர். மேலும் மனு குறித்து அரசு தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்துள்ளனர்.