புதுச்சேரியில் வீட்டு வாசலில் நிறுத்தப்படும் வாகனங்களை இரவில் திருடி வந்த 2 இளைஞர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக அதிக அளவில் பைக் திருட்டு நடந்து வருவதாக தொடர் புகார்கள் பதிவாகி வந்த நிலையில், காவல்துறையினர்  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்ட வந்தனர். அப்போது ஜிப்மர் அருகே சோதனை நடத்திய போது அவ்வழியாக இரு சக்கர வாகனங்களில் வந்த இரண்டு பேரை பிடித்து வாகன சோதனையில் ஈடுபட உரிய ஆவணங்கள் இல்லாததை தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில்,

முன்னுக்குப் பின் முரணான தகவல்களை தெரிவித்துள்ளனர். பின் அவர்களை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரிக்கையில், அவர்கள் இருவரும் சீர்காழி பகுதியை சேர்ந்த திலீப் குமார் மற்றும் அனீஸ் குமார் என்பது தெரியவந்தது. பட்டதாரியான இருவரும், உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்திலும், ஜிப்மர் பகுதியில்  ஒப்பந்த தொழிலாளராகவும் பணிபுரிந்து வந்துள்ளனர்.  மேற்கொண்ட விசாரணையில்,

ஆடம்பர வாழ்க்கைக்கு பணம் இல்லாததால் இருசக்கர வாகனங்களை திருடி விற்பனை செய்து வந்ததாக  இருவரும் ஒப்புக் கொண்டனர். உணவு  டெலிவரி செய்யும் போது கேட்டிற்கு வெளியில் நிற்கும் வாகனங்களே இவர்களின் இலக்காக இருந்துள்ளது. இவர்களிடமிருந்து தற்போது 6 லட்சம் மதிப்புள்ள 10 வாகனங்களை காவல்துறையினர்  பறிமுதல் செய்ததுடன் வழக்கு பதிவு செய்து  இரண்டு பேரையும் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.