தீபாவளிக்கு விதவிதமான பலகாரங்களை வீட்டில் செய்வார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அதிரசம் பிடிக்கும். பாரம்பரிய தென்னிந்திய இனிப்பு வகையான அதிரசத்தை செய்வது எப்படி என்பதை பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பச்சரிசி-1 கிலோ

வெல்லம்-3/4 கிலோ

ஏலக்காய்-6

எண்ணெய்-தேவையான அளவு

முதலில் பச்சரிசியை இரண்டு அல்லது மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை பத்து நிமிடங்களுக்கு காய வைத்து சற்று ஈரப்பதமாக இருக்கும்போது ஒரு மிக்ஸியில் இட்டு அரைத்து எடுக்க வேண்டும். இதனையடுத்து முக்கால் கப் வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி பாகினை தயார் செய்ய வேண்டும் . இதற்கிடையே அரைத்து வைத்திருக்கும் பச்சரிசி மாவில் இரண்டு ஏலக்காயை சேர்க்க வேண்டும்.

வெல்ல பாகு சூடு ஆறுவதற்கு முன்பு ஏற்கனவே தயார் செய்துள்ள பச்சரிசி மாவை அதனுடன் கலந்து எடுக்க வேண்டும். இதனையடுத்து மாவு கெட்டியான பதத்திற்கு மாறும் வரை நன்றாக பிசைய வேண்டும். அந்த மாவு மீது சிறிதளவு நல்லெண்ணெய் ஊற்றி இரண்டு அல்லது மூன்று நாட்கள் அப்படியே மூடி வைக்க வேண்டும். மூன்று நாட்களுக்கு பிறகு சரியான பதத்தில் தயாராக இருக்கும் அதிரசத்தை வட்டமாக தட்டி எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான அதிரசம் ரெடி.