விநாயகர் என்றாலே அருகம்புல் என்பதற்கு ஏற்ப பக்தர்கள் விநாயகர் கோவிலுக்கு செல்லும்போது அதிகபட்சம் அருகம்புல் மாலை வாங்கி செல்வார்கள். ஆனால் பிள்ளையாருக்கு அருகம்புல்லுக்கும் என்ன தொடர்பு என்று கேட்டால் பலருக்கு தெரிவதில்லை. இது குறித்து புராணக்கதை கூறுவதாவது, அனலாசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்துள்ளான். அவனை எதிர்த்து யார் சென்றாலும் அவர்களை எரித்து சாம்பலாக்கி விடுவான். அந்த அனலாசுரனை பிரம்மாவாலும் கூட எதிர்த்து நிற்க முடியாத காரணத்தினால் தேவர்களுடன் சேர்ந்து சிவன் பார்வதியை சந்தித்து தங்கள் பிரச்சனையை எடுத்துரைத்துள்ளனர்.

இதை தொடர்ந்து விநாயகரை அழைத்த சிவபெருமான் அனலாசூரனை அழித்துவிடும்படி கட்டளையிட்டுள்ளார். தந்தை சொல் கேட்டு தனது பூதகணங்களுடன் போருக்கு புறப்பட்ட விநாயகருக்கு பெரும் அதிர்ச்சி  காத்திருந்தது. அனலாசுரன் தனது படையான பூதகணங்களை எரித்து சாம்பலாக்கி இருந்தான். இதனால் கோபம் கொண்ட விநாயகர் அனலாசுரனை முழுவதுமாக விளங்கி விட்டார். விநாயகரின் வயிற்றில் இருந்த அனலாசுரன் அவரது உடலுக்குள் இருந்து வெப்பத்தை ஏற்படுத்தினான்.

இதனை விநாயகரால் தாங்க முடியாமல் அவருக்கு கங்கை நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனாலும் வெப்பம் குறையாத நிலையில் முனிவர் ஒருவர் அருகம்புல்லை கொண்டு வந்து விநாயகரின் தலையில் வைத்துள்ளார். அப்போது வயிற்றில் இருந்த அனலாசுரன் ஜீரணமாகி அழிந்துள்ளான். இதைத்தொடர்ந்து விநாயகர் பக்தர்கள் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சனை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். இதுதான் அருகம்புல்லுக்கும் விநாயகருக்கும் இருக்கும் தொடர்பு என்று கூறப்படுகிறது.