தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார்.

அதன்பின் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார். அதோடு சென்னை மேற்கு மாவட்ட பாஜக ஐடி விங் நிர்வாகிகள் கூண்டோடு அக்கட்சியிலிருந்து ராஜினாமா செய்தனர். அதன்படி சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவு தலைவர் அன்பரசு, சென்னை மேற்கு மாவட்ட ஐடி பிரிவை சேர்ந்த 10 செயலாளர்கள், 2 துணைத் தலைவர்கள் பாஜகவில் இருந்து விலகியுள்ளனர். அதனை தொடர்ந்து இவர்கள் 13 பேரும் சிடி நிர்மல் குமாரை பின்பற்றி அதிமுகவில் இணையப் போவதாக அறிவித்துள்ளனர்.

ஊர்க்குருவி உயரப் பறந்தாலும் மருந்தாகாது என ஜெ,. உடன் ஒப்பிட்டு பேசிய அண்ணாமலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதில் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செல்லூர் ராஜூ, அண்ணாமலைக்கு வாயடக்கம் தேவை. மத்திய ஆளுங்கட்சி என்ற திமிரில் நடந்துக்கொள்ளக்கூடாது. அதிமுகவினர் பாஜகவில் இணைந்த போது இனித்தது. ஆனால் பாஜகவினர் அதிமுகவில் இணையும் போது கசக்கிறதா? என கேள்வி எழுப்பினார்.