பேரறிஞர் அண்ணா குறித்து பாஜகவின்  மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்த கருத்து சர்ச்சையாகி அதிமுகவினர் மத்தியில் மிகப்பெரிய விவாத கிளம்பியது. முதலில் ஜெயக்குமார் அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை என்று தெரிவித்து, அதன் பிறகு மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி நடத்தி,  கடந்த 25ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக செய்தி குறிப்பை வெளியிட்டார்கள்.  தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் இல்லை என தெரிவித்தார்கள்.

இதற்கிடையே தமிழக பாரதிய ஜனதா கட்சி – அதிமுக கூட்டணி முறிவு குறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாஜக தேசிய தலைமைக்கு அறிக்கையை அனுப்பியதாக சொல்லப்பட்டது.  மேலும் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர் அண்ணாமலையும் டெல்லியில்  உள்ள தேசிய தலைமையை சந்திக்க சென்றுள்ளார்.நேற்று முதல் தேசிய தலைவர்களை சந்தித்து வரும் நிலையில்,  அவர் இல்லாமல் இன்று கமலாலயத்தில் முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறுகின்றது.

பாஜகவின் மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் முக்கிய பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. ஆறு மாவட்டங்களுக்கு ஒரு பொறுப்பாளர் என்று நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகிகளோடு இந்த ஆலோசனை  நடக்கிறது. இதில் மாநில நிர்வாகிகள் கரு நாகராஜன்,  வினோத் பி செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முன்னதாக அதிமுக பாஜக கூட்டணி தொடரும். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்வதற்காக தான் இதுபோல கூட்டங்கள் நடைபெறுகின்றன. திமுகவோடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக  பாஜகவில் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.