இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதியின் தொகுதியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு அதற்கு பதிலாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து அறப்போர் இயக்கம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் 114-வது வார்டு பங்காரு தெருவில் சென்னை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பல வருடங்களாக இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 150 மாணவர்கள் படித்து வந்த நிலையில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியை இடித்துவிட்டு புதிய பள்ளி கட்டி தருவதாக மாநகராட்சி நிர்வாகம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து மாணவர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட்ட நிலையில் தற்போது  புதிதாக கல்யாண மண்டபம் கட்டப்படுவதாக கூறப்படுகிறது. இதை எதிர்த்து இடிந்த பள்ளிக்கூடத்தின் முன்பாக பெற்றோர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால் பெற்றோருக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. மேலும் மாநகராட்சி பள்ளிக்கூடம் கட்ட வேண்டிய இடத்தில் மோசடி செய்து கல்யாண மண்டபம் கட்டுவதற்கு நடக்கும் முயற்சிகள் குறித்து புகார் கொடுத்துள்ளோம். மேலும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் வரை அறப்போர் தொடரும் என்று பதிவிடப்பட்டுள்ளது.