தமிழக சட்டப்பேரவையில் வியாழக்கிழமை ஆளுநருக்கு வழங்கப்படும் நிதி பற்றி பண்ருட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவருமான வேல்முருகன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், “ஆளுநரின் செலவு குறித்து 5 கவன ஈர்ப்புகள் என்னிடம் வந்துள்ளது. எஸ்.எஸ்.பாலாஜி, முகமது ஷானவாஸ், எழிலன், டி.ஆர்.பி.ராஜா, வேல்முருகன் போன்றோர் கொடுத்திருக்கின்றனர்.

ஆளுநரின் செயல்பாட்டினை தொடாமல் நிதிமேலாண்மை தொடர்பாக மட்டும் பேசுகிறேன். சென்ற ஆட்சிக்காலத்தில் ஆளுநரின் செயலாளர் நிதி கேட்டு அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தை முறையில்லாத கடிதம் என்றே நான் கூறுவேன். இது எப்படி ஜனநாயக நாட்டில் செல்லபடியாகும். காரணம் இன்றி செலவுக்கு ரூ.5 கோடி எப்படி வழங்க முடியும். ஜனவரி மாதம் முதல் மார்ச் வரை 2 மாத செலவுக்கு ரூ.2 கோடி கேட்டிருகிறார். அமைச்சர் கையெழுத்து இன்றி அன்றைய நிதித்துறை செயலாளரே முடிவெடுத்து அத்தொகையை வழங்கி இருக்கிறார்.

இதனிடையே கொள்கை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. ரூபாய்.1 லட்சத்து 56 ஆயிரம் தொகை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு அடுத்த வருடம் ரூ.5 கோடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஆளுநர் ரூ.3 கோடிதான் செலவு செய்துள்ளார். ஆகவே ரூ.5 கோடி வழங்கப்படாது. லண்டனில் தான் மன்னர் ஆட்சி இருக்கிறது. அங்கு மன்னர்களின் செலவுக்குரிய நிதியை என்ன செய்தார்கள்? என கேட்க முடியாது. எனினும் இது ஜனநாயக நாடு. ஜனநாயக நாட்டில் விதிமுறைகளின் படியே செலவு செய்ய முடியும். அதோடு முதல் 2 நிதியாண்டுகளை தவிர்த்து அதிமுக ஆட்சி காலத்தில் வருவாய் பற்றாக்குறை குறைக்கப்படவில்லை” என பதிலளித்தார்.