இயக்குனர் வெற்றிமாறன் தனது திரைப்படத்தில் இனி அந்த காட்சியை வைக்க மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார். 

சென்னையில் இருக்கும் லயோலா கல்லூரியில் பிரசாந்த் மருத்துவமனை மற்றும் லயோலா கல்லூரி விஷுவல் கம்யூனிகேஷன் துறை சேர்ந்து இளம் இதயத்தை பாதுகாப்போம் பற்றி குறும்பட போட்டி நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியானது நடந்தது. இந்த போட்டியில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் பரிசுகளை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது, இதயம் பிறக்கும் முன்பே தொடங்கி இறக்கும் வரை இயங்கிக் கொண்டே இருக்கும் உறுப்பை பாதுகாக்க வேண்டும். உடலை நல்ல வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் கல்லூரியில் படிக்கும் போதும் இயக்குனரான போதும் புகை பிடிக்கும் பழக்கம் இருந்தது. அது தவறானது என பின்னர் தான் நான் உணர்ந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி அந்த பழக்கத்தை விட்டேன்.

மேலும் நல்ல உணவுகளை உட்கொள்ளும் பழக்கத்தையும் மேற்கொண்டு வருகின்றேன். நீங்களும் உங்களின் உடலையும் மனதையும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். முடிந்தவரை சக்கரை பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். இது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என பேசினார். நிகழ்ச்சித்தொடர்ந்து அவர் பேட்டி அளித்த போது பேசியதாவது, தற்போதைய சூழலில் இளைஞர்களுக்கும் மாரடைப்பு ஏற்படுகின்றது.

இதை தவிர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இடையே மன அழுத்தம் அதிகரித்து இருக்கின்றது. மது அருந்துவது, புகை பிடிப்பது போன்ற காட்சிகள் சினிமாவில் வருவது ஒரு பகுதி தான். அதை விட சமூகத்தில் அதிகமாக பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. இனி எனது திரைப்படங்களில் இது போன்ற காட்சிகளை முடிந்த வரை தவிர்ப்பேன். இதுவரை என்னுடைய திரைப்படங்களில் ஹீரோக்கள் புகைபிடிக்கும் காட்சியை நான் தவிர்த்து இருக்கின்றேன் என பேசி இருக்கின்றார்.