தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் வங்க கடலில் நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும் எனவும் அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் இன்று முதல் மே பத்தாம் தேதி வரை தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீச கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக மாறும். இதனால் பெரும்பாலான மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்யும் எனவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் சூரை காற்று வீச கூடும் என்பதால் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.