தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் பராமரிப்பு காரணமாக மெயின் அருவியில் குளிக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 17-ஆம் தேதி பழைய குற்றால அருவிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 17 வயது சிறுவன் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்தார். இதனையடுத்து குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அருவிகளைப் பகுதிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் செய்தியாளர்களிடம் பேசியபோது, மெயின் அருவியை தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என்றார். அதே நேரத்தில் பழைய குற்றால அருவியில் காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவர் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதேபோல் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளருக்கை முன்கூட்டியே கண்டறியும் வகையில் பழைய குற்றாலம், சிற்றருவி, பிரதான அருவி ஆகியவற்றில் சென்சார் கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழு உருவாக்கியுள்ள சென்சார் கருவிகளை அருவிகளின் மேற்பகுதியில் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக குற்றால அருவியின் மேற்பரப்பில் உள்ள வனப்பகுதியில் சென்று அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் குழுவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.