நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறிவுரை வழங்கினார் முன்னாள் இந்திய வீரர் யுவராஜ் சிங்.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆட்டத்தை பார்த்த யுவராஜ் சிங் ஏமாற்றம் தெரிவித்தார். இந்த போட்டியில், 3 இந்திய பேட்ஸ்மேன்கள் (இஷான் கிஷன், ரோஹித், ஷ்ரேயஸ் ஐயர்) ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி வெளியேறினர். குறிப்பாக ஷ்ரேயஸ் ஐயர் அந்த நிலையில் ஹேசில்வுட்டின் 2வது ஓவரில் ஆப் சைடு பவுண்டரிக்காக பவர் ஷாட் ஆடினார். அது டேவிட் வார்னரிடம் கேட்ச் ஆக மாறியது. பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் கூட இப்படி அவுட் ஆகியிருப்பார் ஷ்ரேயஸ் ஐயர்..

இதன் காரணமாக யுவராஜ் சிங் மிகவும் ஏமாற்றமடைந்தார். அவர் தனது கருத்துக்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். குறிப்பாக விளையாட்டில் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்த ஷ்ரேயாஸ் ஐயருக்கு அறிவுரை வழங்கினார். அதாவது அடுத்தடுத்து 2 விக்கெட்டை இழந்திருக்கும் போது அப்படி ஒரு ஷாட் அடுத்து அவுட் ஆனதால் யுவராஜ் அதிருப்தி அடைந்தார்.

கேஎல் ராகுலுக்கு பதிலாக ஷ்ரேயாஸ் ஐயரை 4வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவு குறித்து யுவராஜ் கேள்விகளை எழுப்பினார். அழுத்த சூழ்நிலைகளை சமாளிக்க 4ம் எண் பேட்ஸ்மேனின் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார், மேலும் ஷ்ரேயாஸ் ஐயர் அத்தகைய சூழ்நிலைகளில் தனது முடிவெடுக்கும் திறனை மேம்படுத்த வேண்டும் என்று பரிந்துரைத்தார். பாகிஸ்தானுக்கு எதிராக சதம் அடித்த கே.எல்.ராகுலை நான்காவது இடத்தில் ஏன் பயன்படுத்தவில்லை என்றும் யுவராஜ் ஆச்சரியப்பட்டார்.

யுவராஜ் சிங் ட்விட்டர் எக்ஸ் பக்கத்தில், 4வது பேட்ஸ்மேன் அழுத்தத்தை உள்வாங்க வேண்டும்! அணி தங்கள் இன்னிங்ஸை மீண்டும் கட்டமைக்க முயற்சிக்கும் போது ஷ்ரேயாஸ் ஐயரிடம் இருந்து சிறந்த சிந்தனை தேவை! ஏன் என்று இன்னும் புரியவில்லை, பாகிஸ்தானுக்கு எதிராக 100 ரன்கள் எடுத்த பிறகு ராகுல் 4வது இடத்தில் பேட்டிங் செய்யவில்லை! என்றார்.

இந்த போட்டியில், சுப்மன் கில் டெங்கு காய்ச்சல் காரணமாக விளையாடும் பதினொன்றில் ஒரு பகுதியாக இல்லை, அவருக்கு பதிலாக இஷான் கிஷன் சேர்க்கப்பட்டார். துரதிர்ஷ்டவசமாக, முதல் ஓவரிலேயே  இஷான் கிஷான் டக் அவுட் ஆனார். தொடர்ந்து ஜோஷ் ஹேசில்வுட் ரோஹித் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இருவரையும் அடுத்தடுத்து ஆட்டமிழக்கச் செய்தபோது நிலைமை மோசமாகியது.

அவர்களின் இன்னிங்ஸில் ஆரம்ப பின்னடைவுகள் இருந்தபோதிலும், கே எல் ராகுல் – விராட் கோலி சிறப்பாக இன்னிங்க்ஸை கட்டமைத்து பொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற வைத்தனர். மேலும் ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட  சுழற்பந்து வீச்சாளர்களின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா மீண்டு வெற்றிபெற முடிந்தது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்கள் இணைந்து ஆஸ்திரேலியாவை 49.3 ஓவர்களில் 199 ரன்களுக்கு சுருட்டினார்கள்.

இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் எவரும் அரை சதம் அடிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக ஸ்டீவ் ஸ்மித் 46 ரன்கள் மற்றும் வார்னர் 41 ரன்கள் எடுத்தனர்.. பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா (3 விக்கெட்), குல்தீப் யாதவ் (2 விக்கெட்), ஜஸ்பிரித் பும்ரா (2 விக்கெட்), ரவிச்சந்திரன் அஷ்வின் , முகமது சிராஜ், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இந்திய அணி அடுத்த போட்டியில் 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணியை டெல்லியில் எதிர்கொள்கிறது.