2024 ஐபிஎல்லில் 156.7 கி.மீ வேகத்தில் வீசி தனது சொந்த சாதனையை முறியடித்தார் லக்னோ வீரர் மயங்க் யாதவ்.

2024 ஐபிஎல் 15வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் நேற்று மோதியது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தோற்கடித்தது. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு  அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய லக்னோ அணி 5 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. லக்னோ அணியில் துவக்க வீரர் குயிண்டன் டி காக் 56 பந்துகளில் 5 சிக்ஸர், 8 பவுண்டரி உட்பட 81 ரன்களும், நிகோலஸ் பூரன் அதிரடியாக 21 பந்துகளில் (5 சிக்ஸ், 1 பவுண்டரி) 40 ரன்களும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் 24 ரன்களும், கே.எல் ராகுல் 20 ரன்களும் எடுத்தனர்.

பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 19.4 ஓவர்களில் 153 ரன்களுக்கு  ஆட்டமிழந்தது. பெங்களூர் அணியில் அதிகபட்சமாக மஹிபால் லோம்ரோர் 13 பந்துகளில் 33 ரன்களும், ரஜத் படிதார் 29 ரன்களும், விராட் கோலி 22 ரன்களும், ஃபாஃப் டு பிளெசிஸ் 19 ரன்களும் எடுத்தனர். இதனால் ஆர்சிபி அணியை 28 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி வீழ்த்தியது.

லக்னோ அணியில் மயங்க் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளும், நவீன் உல் ஹக் 2 விக்கெட்டுகளும் எடுத்தனர். லக்னோ அணியில் 4 ஓவரில் 14 ரன்களே கொடுத்து 3விக்கெட் வீழ்த்திய 21 வயதான இளம் வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது பெற்றார்.. 2024 ஐபிஎல்லில் எஸ்எஸ்ஜியின் தொடர்ச்சியான 2வது வெற்றி இதுவாகும். அதே நேரத்தில் ஆர்சிபி அணி தொடர்ந்து  தனது சொந்த மைதானத்தில் 2வது தோல்வியை தழுவியுள்ளது.

இந்த போட்டியில் குறிப்பாக மயங்க் யாதவின் அபார பந்துவீச்சால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஆர் சி பி அணியை வீழ்த்தியது என்று சொல்லலாம். மயங் யாதவ் மணிக்கு 156.7 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசி ஐபிஎல் 2024 இன் வேகபந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார். மயங்க் யாதவ் ஆர்சிபியின் கிளென் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் மற்றும் பட்டிதார் ஆகிய 3 முக்கிய விக்கெட்டை வீழ்த்தினார். ஆர்சிபியின் பேட்டிங்கை முடக்கினார்.

முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான வெற்றியில் அவர் 155.8 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய நிலையில் தற்போது அவரே அவர் சாதனை முறியடித்துள்ளார். மேலும் ஐபிஎல் போட்டி வரலாற்றில் 155+ கிலோ மீட்டர் வேகத்தில் மூன்று முறை வீசிய வேகப்பந்து  வீச்சாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

2024 ஐபிஎல் பதிப்பில் மயங்க் யாதவ் மிக வேகமாக பந்து வீசினார். ஐபிஎல் 2024ல் வேகப்பந்து வீச்சாளர்கள் பட்டியலில் எல்எஸ்ஜி வேகப்பந்து வீச்சாளர் மயங்க் யாதவ் (156.7), நாந்த்ரே பர்கர் (153), ஜெரால்ட் கோட்ஸி (152.3), அல்ஸாரி ஜோசப் (151.2) மற்றும் மதீஷா பத்திரனா (150.9) ஆகியோர் உள்ளனர். மயங்க் யாதவ் 2 போட்டிகளில் விளையாடி 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆரஞ்சு தொப்பிக்கான ரேஸில் 2வது இடத்தில் உள்ளார்.

பஞ்சாப் அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும், ஆர்சிபி அணிக்கு எதிராக 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய அவர் 2போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருதை வென்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இதனிடையே 2024 டி20 உலக கோப்பையில் அவரை தேர்வு செய்ய வேண்டும் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர். 21 வயதான மயங்க் யாதவின் வேகத்தை பார்த்து முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் வியந்து பாராட்டி வருவது குறிப்பிடத்தக்கது..