2023 ஒருநாள் உலக கோப்பையை இந்த அணி வெல்ல சிறந்த வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயோன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

2019 ஒருநாள் உலகக் கோப்பையில், அரையிறுதியில் இந்தியா நியூசிலாந்திடம் தோற்றது. அடுத்து, 2021 மற்றும் 2022ல் நடந்த டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு மட்டுமே முன்னேறியது.டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை பைனலுக்கு வந்தாலும் இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

ஒருநாள் உலகக் கோப்பையை  2011 முதல், போட்டியை நடத்தும் நாடு கோப்பையை வென்றுள்ளது. 2011-ல் இந்தியாவும், 2015-ல் ஆஸ்திரேலியாவும், 2019-ல் இங்கிலாந்தும் சொந்த மண்ணில் ஒருநாள் உலகக் கோப்பை தொடரை வென்று கோப்பையை வென்றுள்ளன. இதனால் இம்முறை இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இயோன் மோர்கன் கணிப்பு:

இந்நிலையில், பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள இங்கிலாந்து அணிக்கு 2019-ம் ஆண்டு கோப்பையை வென்ற கேப்டன் இயோன் மோர்கன், 2023-ம் ஆண்டு உலக கோப்பையில் எந்தெந்த அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது குறித்து பேசியுள்ளார்.

அதில், “என்னைப் பொறுத்தவரை இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வெல்ல சிறந்த வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன். சொந்த மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது எளிதல்ல. இந்திய அணி கோப்பையை வெல்லவில்லை என்றால் இங்கிலாந்து அணி கோப்பையை வெல்லும். சமீப காலமாக, ஒருநாள் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி தொடர்ந்து அச்சுறுத்தலாக விளையாடி வருகிறது. அனைத்து துறைகளிலும் கை தேர்ந்த அணி. இந்த இரு அணிகளும் இறுதிப் போட்டியில் சந்திக்கும் என நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்..