‘எங்கள் ரசிகர்களுக்கு புதிய நினைவுகளை உருவாக்க விரும்புகிறோம்’ என்று விராட் கோலி கூறியுள்ளார்..

இந்திய மண்ணில் நடக்கவுள்ள உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இலங்கையை வீழ்த்தி ஆசியாவின் ராஜாக்களாக இருப்பதில் இந்தியா உற்சாகமாக உள்ளது மற்றும் உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் போட்டியை நோக்கி செல்கிறது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் 1983 மற்றும் 2011ல் நடந்த வரலாறு வெற்றி மீண்டும் நிகழும் என்று காத்திருக்கிறார்கள்.

உலகக் கோப்பைக்கான 12 ஆண்டுகால காத்திருப்புக்கு முடிவு கட்ட இந்திய அணி சொந்த மண்ணில் ஆயத்தமாகி  வருகிறது. 2011ல் 2015 மற்றும் 2019ல் மீண்டும் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது. ஆனால் 2023ல் நடக்கும் உலக கோப்பையை வெல்வதற்கு இந்திய அணி சிறப்பாக செயல்படும் என நட்சத்திர வீரர் விராட் கோலி கூறியுள்ளார். வீரர்களுக்கு ஆற்றலாக இருப்பது ரசிகர்கள் தான் என்றும், அவர்களுக்கு சிறந்த உலக கோப்பை தருணங்களை வழங்க முயற்சிப்போம் என்று கோலி கூறினார்.

 விராட் கோலி ஸ்டார் ஸ்போர்ட்ஸுக்கு அளித்த பேட்டியில், “கிரிக்கெட் மீதான ரசிகர்களின் பேரார்வம் மற்றும் அசைக்க முடியாத ஆதரவு ஆகியவைதான் உலகக் கோப்பையை வெல்வதற்கான எங்களின் உறுதியை தூண்டுகிறது. கடந்த உலகக் கோப்பையின் நினைவுகள், குறிப்பாக 2011 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற வெற்றி, எங்கள் இதயங்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இதுபோன்ற புதிய நினைவுகளை ரசிகர்களுக்கு வழங்க விரும்புகிறோம்” என்று கோலி கூறினார்.

மேலும் “ரசிகர்களின் உணர்ச்சிகரமான தருணங்களைப் படம்பிடிக்கும் உலகக் கோப்பை போன்ற நம்பமுடியாத தொடரின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். எங்கள் ரசிகர்களின் கனவுகளை நனவாக்க நாங்கள் அனைத்தையும் கொடுக்க தயாராக இருக்கிறோம்” என்று கூறினார்.

சமீபத்தில் முடிவடைந்த ஆசிய கோப்பையில் விராட் கோலி  சூப்பர் 4 கட்டத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் சதமடித்து 13,000 ரன்களை நிறைவு செய்து, ஒருநாள் கிரிக்கெட்டில் மைல்கல்லை எட்டிய 5வது வீரர் ஆனார்.

அக்டோபர் 5ஆம் தேதி  உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. நவம்பர் 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் 10 மைதானங்களில் நடைபெறவுள்ளது. இதற்கு முன், 1983 மற்றும் 2011ல், ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்றது.வரலாற்றில் முதல் முறையாக, உலக கோப்பையை இந்தியா தனியாக நடத்துகிறது. இந்தியாவின் முதல் ஆட்டம் அக்டோபர் 8ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற உள்ளது.