கமல்ஹாசன் 2 வேடங்களில் நடித்த ஆளவந்தான் திரைப்படம் கடந்த 2001 ஆம் வருடம் வெளியாகியது. இந்த படத்தை கலைப்புலி தாணு தயாரித்திருந்தார். இத்திரைப்படம் எடுக்கும்போது கமல் அதிகம் குறுக்கீடு செய்ததால் தான் படம் தோல்வியானது என தயாரிப்பாளர் சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்திருந்தார்.

அதன்பின் படத்தின் நீளத்தை குறைத்து டிஜிட்டலில் மாற்றி விரைவில் ரீ ரிலீஸ் செய்ய உள்ளதாக அவர் கூறியிருந்தார். இந்த நிலையில் தற்போது கமலின் ஆளவந்தான் ரீ ரிலீஸ் குறித்து ஒரு புது அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் சுமார் 1,000 தியேட்டர்களில் இப்படம் ரீ ரிலீஸ் ஆகும் என போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

இதன் காரணமாக கமல் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். இதற்கு முன்னதாக ரஜினிகாந்த்தின் பிறந்தநாளையொட்டி பாபா படம் புது தொழில்நுட்பத்துடன் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், தற்போது கமல்ஹாசனின் “ஆளவந்தான்” படம் வெளியாக உள்ளது. பாபா, ஆளவந்தான் போன்ற இரண்டு படங்களையும் சுரேஷ் கிருஷ்ணா தான் டைரக்டு செய்திருந்தார். இந்த 2 திரைப்படங்களுக்கும் அந்தந்தப் படத்தின் நடிகர்களே திரைக்கதை, கதை எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.