இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தென் மாவட்ட மக்கள் பயன்பெறும் விதமாக சென்னை முதல் நெல்லைக்கு வந்தே பாரத் ரயில் விரைவில் இயக்கப்பட இருக்கிறது. சென்னை டு நெல்லை வந்தே பாரத் ரயில் முதற்கட்டமாக எட்டு பெட்டிகள் இருக்கும் என்றும் பயணிகளிடமிருந்து கிடைக்கும் வரவேற்பு பொறுத்து கூடுதலாக பெட்டிகள் இணைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. படுக்கை வசதி பெட்டிகள் தயாரிக்கப்படாததால் தற்போது எட்டு பெட்டிகளும் இருக்கை வசதி கொண்டதாக மட்டுமே இருக்கும்.

சென்னையில் இருந்து பொதுவாக நெல்லைக்கு செல்ல பிற ரயில்களில் 10 மணி நேரம் ஆகும். ஆனால் வந்தே பாரத்தில் எட்டு மணி நேரத்தில் செல்லும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி, மதுரை, நெல்லை ஆகிய நான்கு ரயில் நிலையங்கலில் மட்டுமே நிற்கும். விரைவில் நெல்லை வந்தே பாரத் ரயில் வருவது தென் மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.