அமெரிக்க நாட்டில் பிரபல ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்பவருக்கு தற்போது 68 வயது ஆகிறது. இவர் தன்னிடம் பட வாய்ப்பு கேட்டும் வரும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை ஹாலிவுட் நடிகைகளான ராஸ் மேக்கோவன், அன்னபெல்லா, ஜெ டோ, ஏஞ்சலினா ஜோலி உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பெண்கள் கொடுத்துள்ளனர்.

இது குறித்து போலீசார் உடனடியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இதில் கடந்த 2006 ஆம் ஆண்டு திரைப்படத் தயாரிப்பு பெண் நிர்வாகியான மிமி ஹலேயி மற்றும் 2013 ஆம் ஆண்டு நடிகை ஒருவரும் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஹர்வி வெய்ன்ஸ்டீன் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த அமெரிக்கா நீதிமன்றம் ஹர்வி வெய்ன்ஸ்டீனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவர் தற்போது சிறையில் உள்ளார். இந்த நிலையில் இத்தாலி நாட்டைச் சேர்ந்த நடிகை கடந்த 2013 ஆம் ஆண்டு ஹர்வி வெய்ன்ஸ்டீன் தன்னை பாலியல் கொடுமை செய்ததாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரக் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கோர்ட்டு அவருக்கு மேலும் 16 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.