பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் ஷாருக்கான். இவர் தற்போது பதான் என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இந்த படத்தில் தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சி நடனம் ஆடியது பெரும் சர்ச்சையாக மாறியது. இந்த சம்பவம் குறித்து அசாம் மாநில முதல்வர் ஹிமந்த விஷ்வ சர்மாவிடம் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். அதாவது பஜ்ரங்தால் அமைப்பினர் ஷாருக்கானின் திரைப்பட பாதகைகளை கிழித்தெறிந்து தீ வைத்து கொளுத்தியது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், முதல்வர் ஹிமந்த விஷ்வ ஷர்மா எனக்கு ஷாருக்கான் யார் என்பதே எனக்கு  தெரியாது என்று கூறினார்.

எனக்கு அவரைப் பற்றியும் அவருடைய பதான் படத்தை பற்றியும் எதுவும் தெரியாது. இந்த பிரச்சினைகள் குறித்து பாலிவுட் பிரபலங்கள் பலரும் என்னை தொடர்பு கொண்டு பேசியபோதும் ஷாருக்கான் என்னை தொடர்பு கொண்டு பேசவில்லை. ஒருவேளை ஷாருக்கான் என்னை அழைத்து பேசியிருந்தால் இந்த விவகாரத்தில் நான் தலையிட்டு பிரச்சனை என்ன என்பதை பார்த்து சட்டம் ஒழுங்கு மீறப்பட்டிருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும் என்று கூறினார். மேலும் பதான் திரைப்படம் ஜனவரி 25-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.