மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை சேர்ந்த மக்களுக்கு உதவும் விதமாக 6000 ரூபாய் வெள்ள நிவாரண தொகை அளிப்பதற்கு அரசு அறிவித்தது. கடந்த 16ஆம் தேதி முதல் இதற்காக விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு அதன் பிறகு ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு நேரடியாக பணம் வழங்கப்பட்டது. ஆனால் சென்னை மணலியைச் சேர்ந்த பகுதியில் வெள்ள நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்த ரேஷன் கடை கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் அடைக்கப்பட்டதாகவும் முன்னதாக வழங்கப்பட்ட டோக்கன்களுக்கு  ஞாயிற்றுக்கிழமை பணம் வழங்கப்படும் என்று கூறப்பட்ட நிலையில் கடை மூடி இருப்பது தெரிய வந்தது.

வங்கிக்கணக்கு மூலமாக பணம் செலுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார்கள். ஆனால் தற்போது வரை அவர்களுடைய வங்கி கணக்குகளில் பணம் செலுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தென் மாவட்டங்களுக்கு அரசு நிவாரணத் தொகை வழங்க இன்று முதல் டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ள நிலையில் நிவாரணம் வழங்குவது குறித்து அரசு உரிய முன்னேற்பாடுகளை செய்து எந்தவித முறைகேடுகளுக்கும் இடமில்லாமல் நிவாரணத் தொகை சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.