சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ரச்சின் ரவீந்திராவை எடுக்க வேண்டும் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் கருத்து தெரிவித்துள்ளார்..

வரும் 2024க்கான ஐபிஎல் மினி ஏலத்தில் பரபரப்பாக விற்கப்படும் வீரர்களில் ரச்சின் ரவீந்திரா முதல் வரிசையில் இருப்பார். அவரை எடுக்க அனைத்து உரிமையாளர்களும் தங்களால் இயன்ற முயற்சி செய்வார்கள் என்பதில் எந்த  சந்தேகமுமில்லை. 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் தனது சிறப்பான ஆட்டத்தால் கவர்ந்த நியூசிலாந்தின் இளம் வீரர் ரச்சின் ரவீந்திரா, பேட்டிங்கில் 578 ரன்கள் குவித்தது மட்டுமின்றி பந்துவீச்சிலும் 5 விக்கெட்டுகளை எடுத்துள்ளார்.

இதன் மூலம் இந்த மாதம் டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியன் பிரீமியர் லீக்  ஏலத்தில் அவர் பெரும் விலைக்கு வாங்கப்படுவார் என கிரிக்கெட் ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் இர்பான் பதான் சுவாரஸ்யமாக கருத்து தெரிவித்துள்ளார். ரச்சினுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பெரும் தொகையை வழங்கலாம் என்று அவர் கூறினார். அந்த அணியில் இருந்து ஹாரி புரூக் வெளியேறியது ஏற்கனவே தெரிந்ததே.

இர்பான் பதான் கூறியதாவது,“சன்ரைசர்ஸ் அணியில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய சுழற்பந்து வீச்சாளர் மற்றும் பேட்டிங்கில் சிறந்து விளங்கும் வீரர் பற்றாக்குறை உள்ளது. சிறந்த முறையில், அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய ஒரு சரியான சுழற்பந்து வீச்சாளர் இருக்க விரும்புகிறார்கள். கடந்த சீசனில் அடில் ரஷித் இருந்தார், ஆனால் சமீபத்தில் அவரையும் அணி விடுவித்தது. மயங்க் மார்கண்டே ஏற்கனவே அணியில் உள்ளார். ஆனால் அவர்களுக்கு இன்னும் கொஞ்சம் தேவை. அவரை விட சிறப்பாக பந்து வீசக்கூடிய ஒரு பந்து வீச்சாளர் தேவை.  வாஷிங்டன் சுந்தர் மற்றும் மார்கோ ஜான்சன் ஆகிய இரண்டு ஆல்-ரவுண்டர்கள் பேட்டிங்கைப் பொறுத்த வரையில் சிறப்பாகச் செயல்பட்டால், அவர்கள் விளையாடும் லெவனில் விளையாடலாம். ஆனால் ஒரு பேக்அப் ஓப்பனர் அவர்களுக்கு மிகவும் முக்கியமானது, அதனால்தான் அவர்கள் ரச்சின் ரவீந்திராவின் பின்னால் செல்ல வேண்டும்” என்று கூறினார்.

இர்பான் பதான் சொல்வதை போல இந்த முறை ஏலத்தில் ரச்சின் ரவீந்திராவுக்கு எஸ்ஆர்எச் கடுமையாகப் போட்டியிடும் என எதிர்பார்க்கலாம். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கடந்த 3 வருடங்களாக பெரிய அளவில் சோபிக்கவில்லை. கேப்டன்களை மாற்றினாலும், எதிர்பார்த்த அளவுக்கு பலன் இல்லை. எனவே  இம்முறை அணியில் தீவிர மாற்றங்களைச் செய்ய ஹைதராபாத் அணி விரும்புகிறது. மார்க்ராமின் தலைமையில் அடுத்த சீசனில் சிறந்ததை எட்டுவோம் என்று அந்த அணி நம்பிக்கை கொண்டுள்ளது. டிசம்பர் 19-ம் தேதி நடைபெறும் ஐபிஎல் ஏலத்தில் ரூ. 34 கோடிகளை வைத்து  முக்கிய வீரர்களை கொண்டு வந்து அனைத்து துறைகளையும் பலப்படுத்த ஹைதராபாத் அணிக்கு இது ஒரு வாய்ப்பு.

வரவிருக்கும் சீசனுக்கு முன்னதாக, எய்டன் மார்க்ரம், புவனேஷ்வர் குமார், க்ளென் பிலிப்ஸ், ஹென்ரிச் கிளாசென், மார்கோ ஜான்சன் மற்றும் பலர் உட்பட பல வீரர்களை சன்ரைசர்ஸ் தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம், அவர்கள் அடில் ரஷித், அகேல் ஹொசைன், ஹாரி புரூக் மற்றும் பிற வீரர்களை விடுவித்தனர்.ஐபிஎல் 2024 ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி துபாயில் நடைபெறுகிறது. ரச்சின் ரவீந்திரா, டிராவிஸ் ஹெட் மற்றும் பலர் உட்பட 1166 வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளனர்.