பீகார் கோபால்கஞ்சை சேர்ந்த குவாஷிகர் அலி, கடந்த 2020 ஆம் வருடம் போதை மருந்து தடுப்புப்பிரிவு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். இந்த சிறையில் கைதிகள் தடைசெய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வருவதாக காவல்துறையினருக்கு குற்றச்சாட்டு வந்த நிலையில், திடீர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். அப்போது கைதிகளிடம் இருந்து செல்போன் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டு தவறு செய்த கைதிகளுக்கு தண்டனையும் அளிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக மீண்டும் அந்த சிறைச்சாலையில் சோதனை நடத்திய போது குவாஷிகர் அலியிடம் செல்போன் இருந்ததை கண்டுபிடித்து உள்ளனர். இதனிடையே காவல்துறையினரிடம் சிக்காமல் இருக்க குவாஷிகர் அலி திடீரென மொபைல் போனை கடித்து விழுங்கி உள்ளார்.

அதன்பின் அடுத்த நாள் குவாஷிகர் அலிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அலறித்துடித்த அவரை சிறைக் காவலர்கள் அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது அவரை பரிசோதித்தபோது வயிற்றில் செல்போன் உதிரிபாகங்கள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதோடு விரைவில் இவருக்கு அறுவைசிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறி உள்ளனர்.