தென் கிழக்கு ஐரோப்பிய நாடான மாண்டெனெக்ரோவில் வினோதமான போட்டி ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இந்த போட்டியில் வெற்றி பெறும் நபர் சோம்பேறி குடிமகன் என்ற பட்டத்தை வெல்ல முடியும். என்ன போட்டி என்றால் இதில் கலந்து கொள்பவர்கள் 24 மணி நேரமும் மெத்தையில் படுத்தபடியே இருக்க வேண்டும். எந்த வேலையும் செய்யக்கூடாது. எட்டு மணி நேரத்திற்கு ஒருமுறை கழிப்பறைக்கு செல்ல அனுமதி உண்டு. மற்ற நேரங்களில் அவர்கள் உட்கார்ந்து இருக்கவோ எழுந்து நிற்கவோ அனுமதி கிடையாது. இந்த விதிமுறைகளை மீறும் பட்சத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டு போட்டியிலிருந்து விலக்கப்படுவார்கள்.

போட்டியின் போது செல்போன், லேப்டாப், புத்தகங்கள் போன்றவற்றை பயன்படுத்த அனுமதி உண்டு. ஒரு மாத காலமாக இந்தப் போட்டி நடைபெற்று வரும் நிலையில் தொடக்கத்தில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். ஆனால் இப்போது ஏழு பேர் மட்டுமே மெத்தையில் படுத்த படி வெற்றியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு சோம்பேறி குடிமகன் என்ற பட்டத்தோடு 88 ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.